2024-ம் ஆண்டு குரு பெயர்ச்சி ராசி பலன்கள் - கன்னி

2024-ம் ஆண்டு குரு பெயர்ச்சி ராசி பலன்கள் - கன்னி

மற்றவர்களின் விருப்பத்தை அறிந்து செயல்படும் கன்னி ராசி வாசகர்களே!
 
எதிர் வரும் 01-05-2024 முதல், இதுவரை அட்டம ஸ்தானத்தில் அமர்ந்த குரு பாக்கியஸ்தானத்தில் அமர்வதும், உங்களின் ராசியை பார்ப்பதும், உங்களுக்கு சிறப்பான பலன்களை தருவார்.
 
குரு பார்க்க கோடி நன்மை என்பது போல உங்களின் ராசியையும். உங்களின் முயற்சி ஸ்தானத்தையும் பூர்வ புண்ணியஸ்தானத்தையும் பார்ப்பதும் சிறப்பான பலன்களை பெற்று தருவதுடன் இதுவரை இருந்த உங்களின் அனைத்து கஷ்டங்களிலிருந்து விடுதலை பெறுவீர்கள். உங்களின் முக்கியமான காரியங்களில் இருந்து வந்த தடைகள் நீங்கி, மனமகிழ்ச்சியையும், குடும்ப ஒற்றுமையும் ஓங்கும்.
 
திறமையுடன் தினம் செயல்பட்டு, உங்களின் தொழிலிலும், உத்தியோகத்திலும் மேன்மை பெறுவீர்கள். நம்பிக்கையுடன் ஒவ்வொரு காரியத்தையும் செயல்படுத்தி, அனைத்திலும் வெற்றிப் பெறுவீர்கள். தனித்து விடப்பட சிலருக்கு புதிய உறவு வந்து சேரும். வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு சொந்த நாடு வரவும், பல காலம் சந்திக்காத நட்பு உறவுகளையும் பார்க்கும் பலன்களும் அமையும்.
 
உங்களுக்கு ஒரு விடயத்தில் செய்தேயாக வேண்டுமென்ற நிலை வரும் போது தவறாமல் அதனை செய்து முடித்து, நல்ல பலனைப் பெறுவீர்கள். சரியான கால கட்டம் வரும் போது உங்களுக்கு எதை கொடுத்து விருத்தி செய்ய சொன்னார்களோ.. அதனை பல மடங்கு செய்து முடித்து விடுவீர்கள்.
 
பூர்வ புண்ணிய பலன்களில் இருந்த தடை நீங்கி, பூர்வீக சொத்து சம்மந்தமான விடயங்கள்.. விரைவில் நல்ல முடிவை எட்டும். பொது வாழ்விலும், அரசியல் பிரவேசத்திலும் நீங்கள் எடுக்கும் முடிவு.. நினைத்த காரியம் நன்மையைத் தரும். சுமை தாங்கியாக சிலருக்கு உதவி செய்வீர்கள். பணபுழக்கம் இருக்கும். கேட்ட இடத்திலிருந்து பண வரவு வரும்.
 
புனித யாத்திரை சென்று வருதல், தீர்த்த யாத்திரை சென்று வர பலருக்கு சந்தர்ப்பம் அமையும். வாகன வசதிகளும், அடிக்கடி வெளியூர் பயணம் சென்றும் வருவீர்கள். ஆசிரியர் பணியில் சிறந்து விளங்குவீர்கள். முக்கிய பிரமுகர் சந்திப்பு உங்களுக்கு உதவியும், நற்பலனும் தரும்.
 
பரிகாரம்:
 
வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற பட்டுதுணி எடுத்து, குரு பகவானுக்கு சாற்றி, மஞ்சளால் அர்ச்சனை செய்து வேண்டிக் கொள்ள... சகல காரியத்திலும் வெற்றியையும், நன்மையையும் பெறுவீர்.